உருப்படாதது – 28/1/2011.

2011னின் சபதங்கள்…

  • பாதியில் எழுதி முடிக்காமல் உள்ள நாவலை முடிக்கவேண்டும்.
  • தேர்தலில் ஒரு நல்ல ஓட்டு, ரெண்டு கள்ள ஓட்டு போட வேண்டும். துட்டு நெறையா குடுக்குறவுங்களுக்கு கள்ள வோட்டு, ஐபோன் கொடுக்குறவுங்களுக்கு நல்ல வோட்டு. இலவச டெக்னாலஜி எங்கையோ போய்க்கிட்டுருக்கு.
  • சென்னைப் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும். மொத்தம் 6543 பக்கங்கள். நெனைச்சாலே கண்ணக்கட்டுது.
  • ட்விட்டரில் 10000 ஃபாலோயர்சைச் சேக்க வேண்டும்.
  • ரொம்ப நாளா குறும்படம் எடுக்கனும்னு சொல்லிக்கிட்டிருக்கிற நண்பருக்கு ஃபைனான்ஸ் பண்ணனும். ரொம்ப நல்ல கதை. இப்போ நெனைச்சாலே கண் கலங்குது. உருக்கமான கதை. கதை கீழே இருக்கு. மிஷ்கின் படிக்காம இருக்கனும்.
  • ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வாங்கி வச்ச ஆர்மோனியம் சும்மா தூங்குது. துடைக்கவாவது கத்துக்கனும்.
  • மாரத்தான் ஓட்டம். இங்க எங்க நடக்குதுனு தெரியல. ஆனா எப்படியாவது ஓடி முடிக்கனும், இன்ஸ்டால்மண்ட்லேயாவது.
  • பத்து உலக சினிமா, ஐந்து லோக்கல் சினிமா, மூணு நாவல், ஏழு கவிதைத் தொகுப்பு, நாலு ரெஸ்டாரண்ட், எட்டு கையேந்திபவன்… இதெல்லாம் இந்த வருஷ விமர்சன லிஸ்ட்ல இருக்கு. எப்படியாவது முடிக்கனும். டமிள் இணையக் கடமைனு ஒண்ணு இருக்கில்ல.
  • வாங்கியிருக்கிற Canon EOS 7Dயை வச்சி PiT போட்டி ஒண்ணுலயாவது ஜெயிக்கனும்.

குறும்படக் கதை :
கரிசல் காட்டில் ஒரு ஏழைப் பாட்டி. விறகு எடுத்துத் தான் பசி போக்கிக் கொள்ள வேண்டும். அவளுக்கு ஒரு மகள். சென்னையில் ஒரு கணிணி நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர். விவாகரத்தானவர், ஒரே ஒரு டீனேஜ் பையன். பையன் *சு விட்டாலும் Yo man, whaz up, என்று தான் கேட்கும். அந்த அளவுக்கு நாகரீக உலகில் இருப்பவன். நிறுவனம் ப்ராஜெக்ட் ஸ்டேடஸ் மீட்டிங்கிற்காக ஒரு மாசம் அவரை அமேரிக்காவிற்கு அனுப்புகிறது. மகனைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை. மகனைத் தாயிடம் விட்டுச் செல்கிறார்.

நாகரீகப் பேரனும், கரிசல் பாட்டியும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது கதை. நிறைய சுவாரசியம் உண்டு. பேரன் KFC fried chicken கேட்க, பாட்டி நாட்டுக் கோழிக் குழம்பு வைக்கிறதும், FTV பாக்க வேண்டும் என்று சொல்ல, பாட்டி பஞ்சாயத்து டீவியில் “வயலும் வாழ்வும்” வைப்பதும் என்று செல்கிறது. பின்னர் பாட்டியின் மனது மெச்சும்படியாக, பாட்டியின் ஒரு ஏக்கர் தரிசு நிலத்தில் “பசுமை விகடன்” படித்து, பேரன் கம்பு விளைவிப்பதும், நாட்டாமையின் மகளை சைட் அடித்து கல்யாணம் முடித்து ஊர் ப்ரசிடண்ட் ஆவதும் என்று முடிகிறது.

லேட்டா வந்தாலும்…
சென்னைப் புத்தக கண்காட்சியில வாங்குன புத்தக லிஸ்டை எல்லோரும் எழுதியாகனும்னு ஒரு (தலை)விதி இருக்கு. கஷ்டப்பட்டு நாலு முறை அங்கு சென்று வாங்கிய புத்தகங்களைப் பற்றி கட்டாயம் எழுதியாகனும். போன வருஷம் என்னென்ன புத்தகம் வாங்கனும்னு லிஸ்ட் எடுத்துப்போய் பேஜாராகிவிட்டது. கடை கடையா தேடி அலையனும், ஒண்ணு தேடுற புக் இருக்காது. இல்லைன்னா டிஸ்ப்ளே புக் மாதிரி அழுக்கா இருக்கும். போனது கடேசி ரெண்டு நாள்ளயில்ல. இந்த தடவை அப்படியாயிடக்கூடாதுன்னு லிஸ்ட் எதுவும் எடுக்கல. போனதும் முதல் வாரத்திலையே. ஜெனரல் டாபிக் மட்டும் தேர்ந்தெடுத்து, சூட்டோடு சூடா அங்கையே படித்து வாங்கின புத்தகங்கள்.,

இலக்கியம்
1. கம்பராமாயணத்தில் திராவிடம்  – சி.கோதண்டபாணி.
2. தொல்காப்பியம் மூலமும் உரையும் – தமிழக அரசுப் பதிப்பகம்.
3. இளைஞன் : திரைக்கதை, வசனம் – கலைஞர் மு.கருணாநிதி.

அரசியல்
4. வயலுக்கு பாயும் செங்குருதி  – காபூலிவாலா.
5. குடவோலை அரசியல்    –  செழியன் முத்துசாமி.
6. விஜயாலய சோழன் வரலாறு – துரை பிரசன்னா.

சமையல்
7. ஒரு மணி நேரத்தில் உலக சமையல் (சீனா) – ஜிங் லி (தமிழில் கா.சாமிநாதன்).
8. பத்திய சமையல் குறிப்புகள் – அருமை நாயகம்.

ஆன்மீகம்
9. எங்கு காணினும் சக்தி    – வி.பத்மநாபன்.
10. நீங்கள் கேட்க நினைத்த ஆன்மீக பதில்கள்    – பசி.செல்வம்.

கவிதை
11. செம்மாந்த மலர்கள் – வை.குமரவேல்.
12. எழுதாத கவிதைகள் – மு.ராஜாராமன்.

கதைகள்
13. கரிசல் பூமியின் ஊற்று – கீரனூர் செல்வி.
14. ஒரு பட்டாம்பூச்சியின் சிறகு – சி.செந்தில் கணேசன்.
15. சிறந்த சாகித்ய அக்காடமி தமிழ்க் கதைகள் 1975-1995 – சாகித்ய அக்காடமி.

கட்டுரைகள்
16. லெமூரியாவைத் தேடி    – வ.ராஜசேகர்.
17. கட்டுடைக்கும் வாழ்வியல்    –  ர.வெங்கடக்கிருஷ்ணன்.
18. உதவி டைரக்டரின் நாட்குறிப்பு  – குயிலன்.

Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது – 28/1/2011.
%d bloggers like this: